46. திருமூல நாயனார்

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாத் கோவில், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய திருபெரும்பற்றப்புலியூரில் சிவானந்த திருக்கூத்தினை கண்டு களித்து காவிரியில் நீராடி தென்கரையில் உள்ள திருவாவடுதுறை அடைந்தார்.

அங்கு காவிரிக்கரையில் இடையர்குல மூலன் விடம் தீண்டி உயிர் துறக்க பசுமாடுகள் அவன்மேல் கொண்ட அன்பால் அவனைச் சுற்றிவந்து அழுது கொண்டிருந்ததை பார்த்தவர் தன் மேனியை ஓர் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் மூலம் மூலன் உடலில் தன் உயிரைப் புகுத்தார். பசுக்கள் சந்தோஷமடைந்தன. மாலை வந்ததும் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூர் நோக்கி செல்ல மூலரும் பின் தொடர்ந்தார். பசுக்கள் யாவும் அதனதன் வீட்டிற்கு சென்றன. வீதியில் நின்ற அவரை பசுக்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் மூலன் வரவில்லை என்பதால் அவனைத் தேடிவந்த அவன் மனைவி அவன் வீதியில் நின்றிருப்பதைக் கண்டு அவன் அருகில் வர விலகி நின்றார்.

அவளை நோக்கி நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை எனக்கூறி வீட்டிற்கும் செல்லாமல் மண்டபத்தில் யோகத்தில் இருந்தார். அவர் மனைவி அவர் வீட்டிற்கு வரமறுப்பதை ஊர் பெரியவர்களிடம் கூற யோகியரைக் கண்டு வந்தவர்கள் உண்மையறிந்து அப்பெண்ணைக் கூட்டிச் சென்றனர். அடுத்த நாள் காலை யோகி பசுக்கள் வந்தவழி சென்று தாம் மறைத்துவைத்த இடத்தில் தன் உடம்பு இல்லாதது கண்டு சிவபெருமான் உடலை மறைத்தது கண்டு அவர் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருளை எல்லாம் தமிழ் ஆக்க எம்பெருமான் இவ்வுடல் தந்துள்ளார் என்பதை முற்றுணர்வினால் உணர்ந்தார். பின் தொடர்ந்த ஆயர் குலத்திற்கும் தமக்கும் யாதொரு தொடர்புமில்லை என உணர்த்தினார்.

திருவாடுதுறையை அடைந்து பெருமானை வணங்கி கோவிலின் மேற்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் அமர்ந்து சிவயோகத்தில் இறையுடன் ஒன்றினார். இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகையாக விரிந்து மலரும் நல்ல திருமந்திரமாலை என்ற நூலை ஆண்டுக்கு ஒருமுறை ஒருபாடல் வீதம் 3000 பாடல்கள் அருளினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சொற்தொடரை தந்தவர் திருமூலரே. சைவ சித்தாந்தங்களுக்கு முன்னோடி திருமந்திரம்.

இறைவன்: மாசிலாமணீஸ்வரர்

இறைவி : ஒப்பிலாமுலையம்மை

தலமரம் : படர் அரசு

தீர்த்தம் : கோமுக்தி

குலம் : இடையர்

அவதாரத் தலம் : திருவாவடுதுறை

முக்தி தலம் : திருவாவடுதுறை

செய்த தொண்டு : சிவ வழிபாடு

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி – அஸ்வினி

முகவரி : அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவாவடுதுறை – 609803. நாகை மாவட்டம்.